வெளியூர் செல்வதற்கு ‘பாஸ்’ கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த பொதுமக்கள் - ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுரை
கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்ல அனுமதி ‘பாஸ்’ வாங்குவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய கலெக்டர் ராஜாமணி, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கோவை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர திருமணம், இறப்பு, உடல்நிலை சரியில்லை உள்பட தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சரியான காரணங்களுக்கு மட்டுமே கலெக்டர் கையெழுத்திட்ட பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிகிறது. இந்த நிலையில், வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று காலையில் வெளியூர் செல்ல பாஸ் வாங்குவதற்காக கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் குவிந்தனர்.
அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கிய வரிசை தபால் நிலையம் சாலையில் இருந்து தண்டுமாரியம்மன் கோவில் அருகே வரை நின்றது. அவர்கள் அனைவருமே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நின்றனர்.
இதை அறிந்த கலெக்டர் ராஜாமணி சம்பவ இடத்துக்கே வந்து, அங்கு காத்து நின்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வாங்கினார். இறந்தவர்களின் ஈமகிரியை சடங்குக்காக செல்ல விண்ணப்பங்கள் கொடுத்தவர்களின் விண்ணப்பத்தை உடனடியாக சரிபார்த்து, அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்லும் வகையில் பாஸ் கொடுக்க உத்தரவிட்டார்.
மற்ற காரியங்களுக்கு செல்ல விண்ணப்பம் கொடுத்தவர்களுக்கு விசாரணை செய்து அந்த விண்ணப்பம் சரியான காரணங்களுக்கு கொடுக்கப்பட்டதா? என்று ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் விண்ணப்பங்கள் கொடுத்தவர்களை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறும் அவர் உத்தரவிட்டார். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அவர் பொதுமக்களிடம் அறிவுரை வழங்கினார்.
அதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து விண்ணப்பம் கொடுக்க பலர் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்கள் யாரையும் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. தயவு செய்து கூட்டம் கூட வேண்டாம் என்றும், சமூக இடைவெளியை கடைபிடித்து நிற்குமாறு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர்.
தொடர்ந்து அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. எனவே கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் கதவு மூடப்பட்டது. விண்ணப்பம் கொடுக்க வந்த அனைவரையும் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் அறிவித்ததுடன், அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதள முகவரியும் நுழைவு வாயில் முன்பு ஒட்டப்பட்டு இருந்தது. அதனை பொதுமக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் பிற பகுதியை சேர்ந்த ஏராளமானோர் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த ஊர் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்து வருகிறார்கள். அந்த விண்ணப்பத்தில் தாங்கள் வெளியூர் செல்வதற்கான காரணம், செல்லும் வாகனத்தின் பதிவு எண்ணையும் குறிப்பிட்டு உள்ளனர். கடந்த 25ந் தேதி காலையில் இருந்து இதுவரை வெளியூர் செல்ல 800 பேருக்கு அனுமதி அளித்து பாஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் கொடுத்து உள்ளனர். அவர்களின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து, அதில் சரியான காரணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பாஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.