நாகையில், ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா உறுதி - பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு
நாகையில், ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
நாகப்பட்டினம்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாகை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் நாகை அருகே உள்ள நாகூர், திட்டச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் நிலவரப்படி 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாகை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நாகை, நாகூர், திட்டச்சேரி, பொரவச்சேரி உள்ளிட்ட 7 ஊர்களில் அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நாகை நகரத்தில் உள்ள யாஹூசைன் பள்ளிவாசல் தெரு, புதுமனை தெரு, முதலாம் கடற்கரை சாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக இவர்கள் 5 பேரின் ரத்த மாதிரி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அங்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்கள் 5 பேரையும் சேர்த்து நாகை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1,368 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 2,015 பேர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள 7 இடங்களை சேர்ந்த 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மருத்துவ பணியாளர்கள் 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நாகை நகரத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட காடம்பாடி, பெரிய கடைத்தெரு, முதலாம் கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் மளிகை, காய்கறி கடைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் நகராட்சி பணியாளர்கள் மூலமாக வீடுகளுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.