கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ - நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் நோயாளிகள் அலறியடித்து ஓடினார்கள்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனா சிறப்பு வார்டு, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கண்சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகள் உள்ளன. இதனால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் நேற்று மாலை 3.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வார்டில் இருந்த நோயாளிகளின் பதிவேடுகளில் பிடித்த தீ ‘குபு,குபு’ என எரிந்ததால் வார்டு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனால் வார்டின் படுக்கையில் இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் செவிலியர்கள் அலறியடித்துக்கொண்டு வார்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். அவர்கள் அனைவரும் துரிதமாக வெளியே ஓடி வந்ததால் தீக்காயம் இன்றி உயிர் தப்பினார்கள்.
இந்த தீ விபத்து பற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் உள்நோயாளிகள் வார்டில் இருந்த கட்டில்கள் படுக்கைகள், போர்வைகள், ஆவணங்கள் எரிந்து கருகியது.
இந்த தீ விபத்தால் கள்ளக்குறிச்சியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.