தேன்கனிக்கோட்டை அருகே, உயிருக்கு போராடிய ஆண் யானை சாவு - வனத்துறையினர் குழிதோண்டி புதைத்தனர்
தேன்கனிக்கோட்டை அருகே கால் முறிந்து உயிருக்கு போராடி வந்த யானை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது. இந்த யானையை வனத்துறையினர் குழிதோண்டி புதைத்தனர்.
தேன்கனிக்கோட்டை,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள காட்டுசீகலஅள்ளி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றிய 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதில் அந்த யானைக்கு இடதுபுற பின்னங்காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த யானையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
அந்த யானை கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே துடுக்கனஅள்ளி பக்கமுள்ள திம்மராயனஅள்ளியில் மாந்தோப்பு ஒன்றில் நடக்க முடியாமல் கால் வலியுடன் தஞ்சம் அடைந்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் வலி நீங்கும் ஊசி போட்டனர். மேலும் யானைக்கு மருந்து கொடுத்து, அதை கிரேன் மூலமாக வாகனத்தில் ஏற்றி தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கு அய்யூர் வனப்பகுதிக்கு உட்பட்ட கோவைபள்ளம் என்னும் வனப்பகுதியில் யானைக்கு வனத்துறையினர் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். அதற்கு குளூக்கோஸ் ஏற்றியும், உணவுகள் கொடுத்தும், மருந்துகள் கொடுத்தும் கண்காணித்து வந்தனர். ஆனாலும் யானையின் உடல் நிலை மோசமாக இருந்தது. இதனால் படுத்த படுக்கையாக இருந்த யானையை காப்பாற்ற வனத்துறையினர் அந்த பகுதியிலேயே முகாமிட்டு கண்காணித்து வந்தனர்.
ஆனாலும் யானை சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி யானையை புதைத்தனர்.