வாலாஜாவில் செல்போன் செயலி மூலம் பொருட்கள் வாங்கும் திட்டம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்

வாலாஜாவில் செல்போன் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே பொருட்கள் வாங்கும் திட்டத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

Update: 2020-04-13 22:15 GMT
வாலாஜா, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வீட்டிற்கே கொண்டு சென்று சேர்க்கும் விதமாக ‘டெலிவரி மீ’ என்ற செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த செல்போன் செயலி மூலம் காலை 7 மணி முதல் மதியம் 12 வரை மட்டுமே பொருட்களை ஆர்டர் செய்து பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாலாஜா நகரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கடைகளில், 22 டெலிவரி ஆட்களை கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடுகளுக்கு மளிகை பொருட்கள் கொண்டு செல்லும் பணியினை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் வாலாஜாபேட்டை பஸ் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

முன்னதாக வாலாஜா நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாளை (இன்று) அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகமே அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடும் என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் வாலாஜா நகரத்தில் 12 மளிகை கடைகளும், ஆற்காடு நகரத்தில் 17 கடைகளும் பதிவு செய்துள்ளன. வாலாஜா நகரத்தில் 24 பேரும், ஆற்காடு நகரத்தில் 25 நபர்களும் மளிகைப் பொருள்களை வீடுகள்தோறும் கொண்டு சென்று வழங்க உள்ளனர். இந்த ஹோம் டெலிவரி வசதி ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம் ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. செல்போன் செயலியைப் பயன்படுத்த தெரியாத பொது மக்களுக்கு உதவும் வகையில் அந்தந்த நகரங்களில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹோம் டெலிவரி செய்வதற்கு பதிவு செய்துள்ள மளிகை கடைகள் ஹோம் டெலிவரி செய்வதற்காக மட்டும் செயல்படும். ஹோம் டெலிவரி செய்யாமல் நேரடியாக விற்பனை செய்யும் கடைகள் ஏதேனும் திறந்து இருந்தால் அவை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிகலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்