ஊரடங்கால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெயில், மழையால் துருப்பிடித்து வீணாகும் அவலம் - வெளியில் சுற்றுவோர் திருந்துவார்களா?

ஊரடங்கால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெயில், மழையால் துருப்பிடித்து வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இனியாவது தேவையின்றி வெளியில் சுற்றுவோர் திருந்த வேண்டும் என்று போலீசார் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

Update: 2020-04-13 22:30 GMT
திருச்சி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு பயந்து ஊரடங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்காத்து கொள்ளும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு இருக்கிறோம். தனித்திரு, விலகியிரு, வீட்டில் இரு என்ற கொள்கை சொல்வதற்கு எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அதை கடைபிடிப்பதில் எவ்வளவு கஷ்டங்கள் உள்ளன. திருச்சியை பொருத்தவரை அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளேயே சென்று விட்டு திரும்பிவிட வேண்டும்.

அதோடு மட்டுமல்லாது 4 சக்கர வாகனத்தில் பயணிக்கவே தடை. மருத்துவமனை மற்றும் மருந்து பொருட்கள் வாங்கிட மட்டும் விதி விலக்கு. தேவையின்றி திரிபவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மோட்டார் சைக்கிளில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி. பின் இருக்கையில் யாரையும் அமரவைத்து கொண்டு செல்லக்கூடாது. இப்படி மாவட்ட நிர்வாகம் என்னதான் நெருக்கடி, கெடுபிடி கொடுத்தாலும் வீட்டில் இளைஞர்கள் எத்தனை நாட்கள்தான் சும்மாவே இருப்பார்கள்?

இந்தநிலையில் இந்த மாத இறுதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடங்கிய கடந்த மாதம் 25-ந் தேதி முதல் இதுவரை, தேவையின்றி வாகனங்களில் சுற்றி திரிந்ததாக திருச்சி மாநகரில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள், கார்கள், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் வெட்ட வெளியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுபோல மாவட்டத்தின் புறநகர் பகுதியிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இப்படி, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவை மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து துருப்பிடித்து வீணாகி வருகிறது. ஊரடங்கு உத்தரவு முடிந்து அவற்றை பெறும் போது, அந்த வாகனம் அடையாளம் தெரியாத வகையில் இருக்கும். போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் குறிப்பிட்ட நாளில் மீட்டால் மட்டுமே அவை நமக்கு மீண்டும் பயன்பட வாய்ப்பு. இல்லையென்றால் அதன் பேட்டரிகள் செயல் இழந்து, வாகனங்கள் சேதமடைந்து பழைய இரும்பு கடையில் போடவேண்டிய நிலை ஏற்படும்.

ஏனென்றால் ஊரடங்கின்போது தேவையின்றி தடையை மீறி வெளியே வந்ததாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 188-ன் கீழும், தொற்று நோயை பரப்பும் வகையில் நடமாடுவதாக பிரிவு 269, உள்நோக்கத்துடன் வெளியே நடமாடுதல் பிரிவு 270, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் பிரிவு 278, அலட்சியத்துடன் நடமாடுதல் பிரிவு 279, பேரிடர் காலத்தில் அரசின் வரைமுறையை மீறியதாக பிரிவு 51(பி) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, இனியாவது தேவையின்றி ஊர் சுற்றுவதை தவிர்த்து உரிய ஒத்துழைப்பு கொடுத்து, உங்கள் வண்டியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஊரடங்கு முடியும்வரை வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள் போலீசார். 

மேலும் செய்திகள்