தற்கொலை செய்து கொள்வதற்காக திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுரத்தில் இருந்து குதித்த தொழிலாளி - மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியான பரிதாபம்
திருவாரூரில், தற்கொலை செய்து கொள்வதற்காக தியாகராஜர் கோவில் கோபுரத்தில் இருந்து கீழே குதித்த தொழிலாளி, மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார். அவர் ஏன் இந்த முடிவை தேடிக்கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு விட்டன. அதன்படி திருவாரூர் தியாகராஜர் கோவிலும் மூடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவர் வடக்கு கோபுரத்தை ஒட்டி உள்ள காம்பவுண்டு சுவர் தடுப்பு கட்டை வழியாக கோபுரத்துக்குள் ஏறினார். பின்னர் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்தார்.
இந்த கோபுரத்தின் உச்சியில் இருந்து 10 அடி கீழே உயர் அழுத்த மின்கம்பி சென்று கொண்டு உள்ளது. கோபுரத்தில் இருந்து கீழே குதித்த அவர், நேராக உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகிய அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து திருவாரூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவர் யார்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருவாரூர் முதலியார் தெருவை சேர்ந்த ஜெயபால்(வயது 40) என்பதும், வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்ததும், இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிய வந்தது.
தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்த இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று காலை தியாகராஜர் கோவிலுக்கு வந்துள்ளார் கோவில் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் கோபுரத்தை ஒட்டி உள்ள காம்பவுண்டு சுவர் தடுப்பு கட்டை வழியாக வடக்கு கோபுரத்தில் ஏறி அங்கு இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி பலியாகி உள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
ஜெயபால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து வி்சாரணை நடத்தி வருகிறார்கள்.