டெல்லி சென்று வந்ததை மறைத்து சென்னையில் தங்கி இருந்த 8 எத்தியோப்பியர்கள் கைது
டெல்லி சென்று வந்ததை மறைத்து சென்னையில் தங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை மண்ணடியை அடுத்த முத்தியால்பேட்டை அப்பு மேஸ்திரி தெருவில் டெல்லி சென்று திரும்பிய 3 பெண்கள், 5 ஆண்கள் என 8 வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதுபற்றி அவர்கள் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையிலான சிறப்பு படை போலீசார், அப்புமேஸ்திரி தெரு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் மறைந்து இருந்த 8 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அதில் அவர்கள் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ரெயில் மூலம் சென்னை வந்து உள்ளனர். ஏற்கனவே டெல்லியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதால், இதுபோல் டெல்லி சென்று வந்தவர்கள் யாராவது இருந்தால் தானாக முன்வந்து தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
ஆனால் சுற்றுலா விசாவில் வந்திருந்த இவர்கள், தாங்கள் டெல்லிசென்று வந்திருந்ததை போலீசாருக்கு தெரியப்படுத்தாமல் தொடர்ந்து இங்கு தங்கி இருந்தது உறுதியானது. அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைதான 8 பேரையும் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கைதான 8 பேரையும் புழல் சிறையில் உள்ள தனி அறையில் அடைத்தனர்.
ரத்த பரிசோதனை முடிவு வந்த பின்னரே இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.