கோடைவெயிலை சமாளிக்க துப்பறியும் நாய்களுக்கு குளுகுளு வசதி
கோடைவெயிலை சமாளிக்க ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் துப்பறியும் நாய்களுக்கு குளுகுளு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் குற்ற சம்பவங்களில் துப்பு துலங்கவும், வெடிபொருட்களை கண்டறிந்து காட்டி கொடுக்கவும் பயிற்சி பெற்ற துப்பறியும் நாய்பிரிவு உள்ளது. ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள இந்த துப்பறியும் நாய் பிரிவில் தற்போது குற்ற சம்பவங்களில் துப்பு துலங்க ரோமியோ, ஜூலி ஆகிய 2 நாய்களும், வெடிபொருட்களை கண்டறிய டயானா, ப்ளோரா ஆகிய 2 நாய்களும் உள்ளன. உரிய பயிற்சி பெற்று ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் இந்த துப்பறியும் நாய்கள் அதற்குரிய பயிற்சியாளர்கள் மூலம் தினமும் வழக்கமான பயிற்சி மற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது கோடைவெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் முடங்கி கிடந்தாலும் வெயில் புழுக்கம் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. மனிதர்களே கோடைவெயிலால் அவதிப்பட்டுவரும் நிலையில் கால் நடைகள் அதனைவிட அதிகமாக அவதிப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் காவல்துறையில் பணியாற்றும் துப்பறியும் நாய்களுக்கு வெயில் கொடுமையால் உடல்நலம் பாதிக்காதவாறு தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. துப்பறியும் நாய்களுக்கு புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதோடு நாய்களுக்கான உபகரணங்கள் அனைத்தும் புதிதாக மாற்றிக்கொடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, வெயில் கொடுமை நாய்களை பாதிக்காதவாறு அதன் அறைகளில் புதிய மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 4 துப்பறியும் நாய்களுக்கும் தனித்தனியாக ஏர்கூலர் மூலம் குளுகுளு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துப்பறியும் நாயின் அறைகளின் வாசலிலும் இந்த ஏர்கூலர் வைக்கப்பட்டு அறைமுழுவதும் குளுகுளு காற்று வீசும்படி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கோடைவெயிலின்போது துப்பறியும் நாய்கள் மிகுந்த அவதிப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், இதனை கருத்தில் கொண்டு தற்போது இதுபோன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக துப்பறியும் நாய்கள் கோடைவெயிலால் உடல்நலம் பாதிக்காதவாறு சுறுசுறுப்பாக துப்பறியும் பணியை மேற்கொள்ளும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.