கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் ஆய்வு
கொடுமுடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.
கொடுமுடி,
கொடுமுடியில் கடந்த 3-ந் தேதி அன்று சுல்தான்பேட்டை மற்றும் காங்கேயம் சாலை ரோஜா நகரைச் சேர்ந்த 2 பேர் டெல்லி சென்று வந்தனர். இதனால் 2 பேரும் பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே சுல்தான்பேட்டை, ரோஜா நகரில் உள்ள 463 குடும்பங்களை சேர்ந்த 1,100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று வந்தார். முதலில் அவர் சுல்தான்பேட்டை பகுதிக்கு சென்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், சுகாதார பணியாளர்கள் தினமும் எடுத்த புள்ளி விவரங்கள் குறித்தும் சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
மேலும் தாசில்தார் ஸ்ரீதரிடம், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டு தெரிந்து கொண்டார். இந்த ஆய்வின்போது வருவாய்த்துறையை சேர்ந்த மண்டல துணை தாசில்தார் மரியஜோசப், வருவாய் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் கொடுமுடி அருகே உள்ள ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு சோதனைச்சாவடியில் உள்ள பதிவேட்டினை ஆய்வு செய்தார். அங்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படும் பணியினை பார்வையிட்டார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகனிடம் சோதனைச்சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்துதான் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின் போது சென்னசமுத்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் வசந்தா உடன் இருந்தார்.