தூத்துக்குடியில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி: சுழற்சி முறையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் - சாளை, விள மீன்கள் பிடிபட்டன
தூத்துக்குடியில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வலையில் சாளை, விளமீன்கள் உள்ளிட்டவை பிடிபட்டன.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. அதே போன்று மீன்பிடி தொழிலும் நிறுத்தப்பட்டது. அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மீன்பிடி தொழிலுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி, நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்க செல்ல வேண்டும். பாரம்பரிய மற்றும் எந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளை மட்டுமே மீன்பிடி தொழிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். 10 எச்.பி.க்கு குறைவான எந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளை மட்டுமே மீன்பிடி தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும். ஒரு படகில் ஒன்று முதல் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும். மீன்பிடி தொழிலுக்கு செல்லும் படகுகள் கூட்டமாக வருவதை தவிர்த்து ஒன்றன்பின் ஒன்றாக கரை திரும்ப வேண்டும்.
மீன்களை ஏலக்கூடங்களில் விற்பனை செய்யக்கூடாது. கடற்கரையில் மீனவர்கள் கூட்டம் கூடக்கூடாது. மீன்பிடி இறங்கு தளங்களில் சில்லரை வியாபாரிகளிடம் மீன்விற்பனை செய்யக்கூடாது. மீன்களை மீன் வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்து கொள்ள வேண்டும். விதிமுறையை மீறும் மீன்பிடி படகுகள் மீது மீன்வளத்துறை மூலமும், போலீஸ் மூலமும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறை மீறும் மீனவ கிராமங்களுக்கு மீன்பிடிக்க அளிக்கப்பட்ட அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை சில மீனவ சங்கங்கள் ஏற்கவில்லை. அதே நேரத்தில் பல மீனவர்கள் ஏற்றுக் கொண்டு சுழற்சி முறையில் மீன்பிடிக்க தயாராகி உள்ளனர்.
கடலுக்கு சென்ற மீனவர்கள்
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து நேற்று 20 மீன்பிடி படகுகள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதேபோன்று மற்ற மீனவ கிராமங்களில் இருந்தும் குறைந்த அளவில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஒவ்வொரு படகிலும் 3 மீனவர்கள் இருந்தனர். அவர்கள் முககவசம் அணிந்தபடி இடைவெளி விட்டு அமர்ந்து இருந்தனர்.
மீன்பிடி படகுகள் நேற்று மதியம் கரைக்கு திரும்பின. அப்போது ஒவ்வொரு படகாக கரைக்கு வந்தன. படகில் வலையுடன் இருந்த மீன்களை 2 மீனவர்கள் ரகம் வாரியாக பிரித்து டப்பாக்களில் அடுக்கி வைத்தனர். ஒரு மீனவர் வியாபாரியிடம் விற்பனை செய்வதற்காக சென்றார்.
கடும் போட்டி
அதே நேரத்தில் மீன்களை தூக்கி செல்வதற்கு போதிய மீனவர்கள் இல்லாததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரே படகுகளில் இருந்து மீன் டப்பாக்களை மீன் விற்பனை செய்யும் இடம் வரை தூக்கி சென்று உதவினர். இதனால் மீன்பிடி இறங்கு தளத்தில் கூட்டம் உருவாகாமல் தடுத்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மீன்கள் வந்ததால், அதனை வாங்குவதற்காக வியாபாரிகள் கடும் போட்டி போட்டனர். இதனால் மீனவர்களுக்கு நல்ல விலை கிடைத்தது. மீன்வாங்க வந்தவர்களையும் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தினர்.
சாளை, விளமீன்
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, மீன்பிடி தொழிலுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட பிறகு மீன்பிடிக்க சென்று உள்ளோம். அரசு அறிவித்த கொரோனா பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடித்து உள்ளோம். மீன்கள் குறைந்த அளவிலேயே பிடிபட்டன. இதில் சாளை, விளமீன், இறால், நண்டு, காரல் உள்ளிட்ட மீன்கள் பிடிபட்டன. சுழற்சி முறையில் மீன்பிடிக்க சென்றாலும் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வாய்ப்பாக அமையும் என்றார்.