கடும் கட்டுப்பாடுகள் எதிரொலி: வீடுகளில் ரகசியமாக இறைச்சி விற்பனை
திண்டுக்கல்லில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் வீடுகளில் ரகசியமாக இறைச்சி விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல்,
ஊரடங்கு உத்தரவால் மளிகை, பால், காய்கறி, மருந்து கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இறைச்சி கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை உரிமம் பெற்ற இறைச்சி கடைகள் மட்டுமே செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாத இறைச்சி கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
இறைச்சி கடைகளின் எண்ணிக்கை பாதிக்கு கீழே குறைந்துவிட்டது. மேலும் கடல் மீன்கள் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கோழி, ஆட்டு இறைச்சியின் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதோடு, ஈஸ்டர் பண்டிகை என்பதால் கோழி, ஆட்டு இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
ஆனால், திண்டுக்கல்லில் கட்டுப்பாடுகள் காரணமாக ஒன்றிரண்டு இறைச்சி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. அந்த கடைகளில் நேற்று இறைச்சி வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.1,000-க்கு விற்பனை ஆனது. அதேபோல் கோழி இறைச்சியை பொறுத்தவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், நேற்று கோழி இறைச்சி ரூ.160-க்கு விற்கப்பட்டது.
அதிலும் ஒருசில பகுதிகளில் அதிகாரிகளுக்கு தெரியாமல் சிலர் வீடுகளில் ஆடு, கோழிகளை அறுத்து இறைச்சியை பொட்டலமாக கட்டி வைத்து ரகசியமாக விற்பனை செய்தனர். திண்டுக்கல்லில் இறைச்சி விலை உயர்ந்ததால், ஒருசிலர் கிராமங்களுக்கு படையெடுத்தனர். கிராமங்களில் ஆட்டு இறைச்சியை பொறுத்தவரை ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை ஆனது.
வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சிலுவத்தூர், கம்பிளியம்பட்டி, ஊராளிபட்டி, வடமதுரை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பிளியம்பட்டியை சேர்ந்த குமரேசன் (வயது 34), பாண்டி (46), சின்னகாட்டுபட்டியை சேர்ந்த பொன்னர் (29), வடமதுரை அண்ணாநகரை சேர்ந்த நடராஜன்(37), ஊராளிபட்டியை சேர்ந்த செல்வம்(36), வீராச்சாமி(45), மற்றொரு செல்வம் ஆகிய 7 பேர் தடையை மீறி இறைச்சி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் காணப்பாடியில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாக மளிகை கடையை திறந்து வைத்திருந்த வடிவேல் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.