தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு: ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை ரத்து - கிறிஸ்தவ தேவாலயங்கள் வெறிச்சோடின
தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டது. இதனால் கிறிஸ்தவ தேவாலயங்கள் வெறிச்சோடின.
தர்மபுரி,
ஏசுநாதர் உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பிரார்த்தனை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் பண்டிகையான நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டது. இதேபோன்று கிறிஸ்தவ வழிபாட்டு சபைகளிலும் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் கிறிஸ்தவ தேவாலயங்கள், சபைகள் நேற்று கிறிஸ்தவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒவ்வொரு தேவாலயத்தை சேர்ந்த பங்குதந்தைகள், சபைகளை சேர்ந்த போதகர்கள் மட்டும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். இதில் கிறிஸ்தவர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
தர்மபுரி நகரம் உள்ளிட்ட சில ஊர்களில் பங்கு தந்தைகள் உள்ளூர் தொலைக்காட்சி மூலம் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள். அதை பார்த்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தர்மபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் பங்கு தந்தை இசையாஸ், உதவி பங்குதந்தை ராஜா ஆகியோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதேபோன்று தர்மபுரி சி.எஸ்.ஐ. ஆலயத்தில் போதகர் பிரபுமோகன் பிரார்த்தனை நடத்தினார். கோவிலூரில் பங்கு தந்தை ஜேசுதாஸ், கடகத்தூரில் பங்குதந்தை ஜோதி, பாலக்கோட்டில் பங்குதந்தை சவுரியப்பன், செல்லியம்பட்டியில் பங்குதந்தை ஜார்ஜ், பொம்மிடியில் பங்குதந்தை அந்தோணிசாமி ஆகியோர் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.