கூடலூரில், நடைபாதை வியாபாரிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கீடு

கூடலூரில் நடைபாதை வியாபாரிகளுக்கு உழவர் சந்தையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-04-13 07:56 GMT
கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கையொட்டி கூடலூரில் காய்கறி, மளிகை, பழக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. இதேபோல் காந்திதிடலில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இதனால் மக்கள் கூட்டம் நகருக்குள் அதிகரித்தது. எனவே நகர பகுதியில் காய்கறி, பழக்கடைகள் திறக்க அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும் காந்திதிடலில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் செயின்ட் தாமஸ் பள்ளிக்கூட மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

மேலும் நகருக்குள் இயங்கி வந்த காய்கறி, பழக்கடைகளும் இடமாற்றம் செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை மையமாக செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் உரிமம் பெற்ற கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகளின் ஒரு தரப்பினர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனால் உரிமம் பெறாத கடைகள் செயல்பட அதிகாரிகள் தடை விதித்தனர். இதற்கு நடைபாதை வியாபாரிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

எனவே கடைகள் வைக்க தங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், தாசில்தார் சங்கீதாராணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது ஒரே இடத்தில் கடைகள் வைத்து உள்ளதால் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் சமூக இடைவெளியை சரிவர பின்பற்றுவது இல்லை. இதனால் நடைபாதை வியாபாரிகளுக்கு உழவர்சந்தை வளாகத்தை ஒப்படைக்க முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள் உழவர் சந்தையை பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டு கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த நடைபாதை வியாபாரிகள் உழவர் சந்தையில் கடைகள் வைத்து உள்ளனர். இதனால் இருவேறு இடங்களுக்கு பிரிந்து செல்வதால் மக்கள் கூட்டம் நெருக்கமாக இல்லாமல் காணப்படுகிறது.

இது குறித்து நடைபாதை வியாபாரிகள் கூறும்போது, கொரோனா பிரச்சினையால் வியாபாரம் இன்றி வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது உழவர் சந்தை வளாகத்தை பயன்படுத்த அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதால், மக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் நியாயமான விலையில் காய்கறிகள், பழங்கள் விற்கப்படுகிறது. எனவே மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல் அதிகாரிகள் கூறும்போது, கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஊரடங்கு தளர்த்தும் வரை நடைபாதை வியாபாரிகள் உழவர் சந்தையில் கடைகள் வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

எனவே மக்கள் ஒரே இடத்துக்கு வராமல் தங்களது பகுதியில் செயல்படும் கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தற்காத்து கொள்ள முடியும். மேலும் வியாபாரிகளும் நியாயமான விலையில் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்