சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரே நாளில், 6 பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் 6 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
சேலம்,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சேலத்தில், இந்தோனேசியாவில் இருந்து வந்த 4 முஸ்லிம் மதபோதகர்கள், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் 2 பெண்கள் உள்பட 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஏற்கனவே நடந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர வெளிநாடு சென்று வந்தவர்கள், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், இந்தோனேசியாவைச் சேர்ந்த முஸ்லிம் மதபோதகர்கள் சென்று வந்த பகுதியை சேர்ந்தவர்கள் என 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் இவர்களில் பலருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தம்மம்பட்டி, கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களுக்கும், சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலத்தில் ஏற்கனவே 14 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று(நேற்று) 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்று பாதித்தவர்களின் உறவினர்கள் ஆவர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மேலும் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்து உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 36 வயது நிரம்பிய பெண் நாமக்கல் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் ஆவார். 25 வயது நிரம்பிய மற்றொரு இளம்பெண் நாமக்கல் அருகே உள்ள லத்துவாடி பகுதியை சேர்ந்தவர். 23 வயது நிரம்பிய வாலிபர் நாமக்கல் மஜீத் தெருவை சேர்ந்தவர்.
இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆவார்கள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் வசித்து வரும் 29 வயது பெண் ஒருவரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
கர்ப்பிணியாக இருந்த இவர் கரூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தாயார் வீட்டில் கடந்த சில வாரங்களாக தங்கி இருந்தார். பிரசவ வலி ஏற்பட்ட அவரை கடந்த 10-ந் தேதி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை தொடர்ந்து அவரது ரத்த மாதிரிகளை டாக்டர்கள் குழுவினர் எடுத்து சேலத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவருக்கு கரூரை சேர்ந்த அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடம் இருந்து நோய் தொற்று பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று போலீசார் டாக்டர் சங்கரன் சாலைக்கு ‘சீல்’ வைத்தனர். அங்கு வெளிநபர்கள் செல்ல தடை விதித்து உள்ளனர். மேலும் சுகாதாரத்துறையினர் அந்த சாலையை கம்புகள் கொண்டு இருபுறமும் அடைத்தனர். அங்கு கிருமிநாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். பிரசவ நாட்களில் அந்த பெண்ணுடன் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.