கீரமங்கலம் பகுதியில் முக கவசம் அணிந்து விவசாய பணியில் ஈடுபடும் பெண்கள்
கீரமங்கலம் பகுதியில் முக கவசம் அணிந்து பெண்கள் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கீரமங்கலம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் கால நீட்டிப்பு செய்யும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள், கூலி தொழிலாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் வேலையின்றி சம்பளம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால் விவசாய பணிகள் முடங்கி உள்ளது. காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளதால் அந்த பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமாக பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலுக்கு வந்த நாளில் தொடங்கி இன்று வரை பூக்கள் பறிக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 10 டன் வரை பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளில் வீணாகி வருகிறது. இதனால் அதனை சார்ந்திருந்த தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் தான் பல விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்து ஊரடங்கால் வீட்டில் இருந்த பெண்கள் மீண்டும் தோட்ட வேலைகளுக்கு சென்று வேலை செய்து வருகின்றனர். அவர்கள் தோட்டத்தில் கடலை பயிரிட்டுள்ள செடிகளில், களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலை செய்யும் இடத்திலும் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள முகத்தை மூடிக் கொண்டு சமூக இடைவெளி விட்டு விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாய பெண்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூக இடைவெளி வேண்டும் என்று சொல்லி குடும்ப அட்டைக்கு ரூ.1,000, அரிசி, பருப்பு போன்றவை கொடுத்தனர். இந்த நிலையில் விவசாயம் செய்யப்பட்ட வயல்கள், தோட்டங்கள் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. ஆண்கள் வெளியே சென்று வேலை செய்ய முடியாத நிலையில் தான் குடும்ப செலவுகளை சமாளிக்க பெண்கள் விவசாய பணிகளுக்கு செல்கிறோம். வேலை செய்யும் இடங்களிலும் கூட அரசு கூறியுள்ளது போல முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடை பிடித்து பாதுகாப்போடு வேலை செய்கிறோம் என்றனர்.