தா.பழூர் பகுதியில் அறுவடை செய்த நிலக்கடலையை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

தா.பழூர் பகுதியில் அறுவடை செய்த நிலக்கடலையை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Update: 2020-04-12 21:45 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர், காரைக்குறிச்சி, சிந்தாமணி, கோடங்குடி, அணைக்குடம், பொற்பொதிந்தநல்லூர், இருகையூர், காடுவெட்டாங்குறிச்சி, நடுவலூர், கார்குடி, பருக்கல் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பல இடங்களில் அறுவடை செய்ய தொழிலாளர்கள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் குறைவான எண்ணிக்கையிலேயே வேலையாட்கள் வருகிறார்கள்.

அறுவடை நடைபெறாத பகுதியில், நன்கு விளைந்த நிலக்கடலை நிலத்திலேயே முளைத்துவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

மேலும் அறுவடை செய்த நிலக்கடலை மூட்டைகளை விற்பனை செய்வதிலும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நிலக்கடலைகளை கும்பகோணம், விருத்தாசலம், திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து நேரடி கொள்முதல் செய்வார்கள். ஆனால் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாலும், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதாலும் அப்பகுதியில் இருந்து வியாபாரிகள் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் போலீசார் கெடுபிடி காரணமாக சரக்கு வாகன டிரைவர்கள் அச்சப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் நிலக்கடலையை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில பகுதிகளில் இடைத்தரகர்கள் நிலக்கடலையை விலை குறைவாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது. எனவே இதை தவிர்க்க அரசு நிலக்கடலைக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்து, வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்