ஊரடங்கை மீறியவர்களின் மோட்டார் சைக்கிளுக்கு மஞ்சள் வர்ணம் பூசி எச்சரிக்கை

நாகையில் ஊரடங்கை மீறியவர்களின் மோட்டார் சைக்கிளுக்கு மஞ்சள் வர்ணம் பூசி போலீசார் எச்சரித்தனர்.;

Update: 2020-04-12 22:00 GMT
நாகப்பட்டினம்,

கொரொனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகையில் அத்தியாவசியமான பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகிறது. ஆனால் நாகையில் பலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தேவையில்லாமல் சாலையில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளனர்.

ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது, அவர்களுடைய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் ஊரடங்கை மீறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நாகை பப்ளிக்ஆபீஸ் சாலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக் நடராஜன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களுடைய மோட்டார் சைக்கிளின் முகப்பு பகுதியில் மஞ்சள் வர்ணம் பூசினர். மேலும் அபராதமும்விதிக்கப்பட்டது.

மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட வாகனங்களில் தொடர்ந்து இதுபோல் தேவையில்லாமல் வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போலீசார்எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்