திருச்சி குட்ஷெட்டில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - பணிக்கு வரும் போது இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்வதாக குற்றச்சாட்டு

திருச்சி குட்ஷெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கு வரும்போது போலீசார் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்வதாக குற்றம் சாட்டினார்கள்.

Update: 2020-04-12 22:15 GMT
திருச்சி, 

திருச்சி குட்ஷெட் யார்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, உரம், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரெயிலில் வந்து இறங்கும். அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைப்பார்கள். வழக்கமான நாட்களில் நாளொன்றுக்கு 200 லாரிகளில் சரக்குகள் ஏற்றி செல்வார்கள். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபிறகு பொதுவினியோக திட்டத்துக்காக 350 லாரிகளுக்கு மேல் ரெயிலில் இருந்து சரக்குகளை ஏற்றி அனுப்புகிறார்கள்.

இந்த பணியில் 300 லாரி டிரைவர்கள், 600 சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 900 பேர் உள்ளனர். குட்ஷெட்டுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களின் பெரும்பாலானவர்களின் வீடுகள் அதிக தொலைவில் இருப்பதால் தினமும் மோட்டார்சைக்கிளில் குட்ஷெட்டுக்கு வந்து பணி செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார்கள். ஒருசிலர் மறுநாள் காலை தொடர்ச்சியாக வேலை இருந்தால் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த ஒருவாரமாக 144 தடை உத்தரவை காரணம் காட்டி வீட்டில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்வதாகவும், இதனால் தொழிலாளர்கள் பணிக்கு வரமுடியாத நிலை உள்ளதாகவும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் டிரைவர்கள் லாரிகளை இயக்காமல் சரக்குகளை இறக்க மறுத்து குட்ஷெட் பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் மாலா ஆகியோர் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குட்ஷெட் யார்டுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு சென்றனர். இந்த சம்பவம் நேற்று காலை அந்த பகுதியில் 2 மணிநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்