விவசாயிகளுக்கு உதவும் ஆலோசனைகள் உடனே அமல்படுத்தப்படும் - தேவேகவுடாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம்
விவசாயிகளுக்கு உதவும்ஆலோசனைகளை உடனே அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேவேகவுடாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.;
பெங்களூரு,
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவி வருவதால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தாங்கள் எனக்கு விரிவாக கடிதம் எழுதியுள்ளீர்கள். அதை நான் முழுமையாக படித்து பார்த்தேன். விவசாயிகளுக்கு உதவ அரசு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் சில ஆலோசனைகளை கூறியுள்ளீர்கள்.
விவசாயிகளுக்கு உதவும் அந்த ஆலோசனைகளை உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இந்த கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் நான் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது இல்லை. சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், தங்களை போன்ற பெரிய தலைவர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கிறேன்.
ரூ.1 லட்சம் உதவி
கொரோனாவால் பாதிப்புகளை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உதவ அரசு அனைத்து வகையான உதவிகளையும் செய்ய முயற்சி செய்து வருகிறது. இந்த நேரத்தில் உங்களின் ஆலோசனைகள் அரசுக்கு உதவியாக இருக்கின்றன.
மேலும் முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு தாங்கள் அனுப்பிய ரூ.1 லட்சம் உதவியை கிடைக்க பெற்றேன். இதற்காக தங்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.