மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டியது - 149 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டி உள்ளது. இதுவரை 149 பேர் உயிரிழந்து உள்ளனர்.;
மும்பை,
கொரோனா வைரஸ் பாதித்த மாநிலங்களில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனாவுக்கு மராட்டியத்தில் நேற்று முன்தினம் வரை 1,761 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் 221 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா அரக்கன் பிடியில் சிக்கியவர்கள் எண்ணிக்கை 1,982 ஆக உயர்ந்து உள்ளது.
நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரத்து 500 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதில் 4-ல் ஒரு பங்கு நோயாளிகள் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மராட்டியத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டி இருப்பது மாநில மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல நேற்று மட்டும் கொரோனாவுக்கு 22 பேர் பலியானார்கள். இதனால் மராட்டியத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக உயிரிழந்த 22 பேரில் 15 பேர் 40 முதல் 60 வயதுடையவர்கள். 6 பேர் 60 வயதை கடந்தவர்கள். மற்றொருவர் 40 வயதுக்கும் குறைவானவர். இவர்கள் அனைவரும் நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய கோளாறு உள்ளிட்ட நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கையாக வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணிவதை மும்பை, தானே, புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட பல நகரங்களில் அரசு கட்டாயமாக்கி உள்ளது.
இந்தநிலையில் அவுரங்காபாத்தில் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த 92 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.