மராட்டியத்தில் 10-ம் வகுப்பு புவியியல் தேர்வு ரத்து - 9, 11-ம் வகுப்பு தேர்வுகளும் கிடையாது என அறிவிப்பு
மராட்டியத்தில் 10-ம் வகுப்புக்கான புவியியல் தேர்வும், 9, 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்தார்.;
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 10-வகுப்புக்கு தள்ளிவைக்கப்பட்டு இருந்த புவியியல் மற்றும் பணி அனுபவ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில கல்வி மந்திரி வர்ஷா நேற்று கெய்க்வாட் அறிவித்தார்.
மாநில கல்வி வாரியத்தின் நடைமுறையின்படி இந்த பாடங்களுக்கான மதிப்பெண் மற்றும் தரமதிப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
9,11-ம் வகுப்புகள்
மேலும் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக வர்ஷா கெய்க்வாட் தெரிவித்து உள்ளார்.
இந்த வகுப்பு மாணவர்கள் எழுதிய முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்து இருக்கிறார்.