தாயமங்கலம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் உடைப்பை நிரந்தரமாக சரிசெய்ய கோரிக்கை

இளையான்குடி அருகே தாயமங்கலம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை நிரந்தரமாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-12 22:00 GMT
இளையான்குடி, 

சிவகங்கை மாவட்டத்தில், இளையான்குடி, காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் கோடைகாலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டு குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வந்ததால் இந்த பகுதியில் கடந்த 2006-2011-ம் ஆண்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை கொண்டு செல்லப்பட்டது. 

இதற்காக பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு ஆங்காங்கே நீரேற்று நிலையமும் அமைக்கப்பட்டது. இந்த பகுதிகளில் வாரந்தோறும் 2 முறை காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இளையான்குடி அருகே தாயமங்கலம் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் நீரேற்று நிலையம் இயங்கி வருகிறது. 

இந்த நிலையத்தில் இருந்த மின் மோட்டார் பழுதாகி பல நாட்களாகியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. மேலும் தற்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலைகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் குடங்களை எடுத்து வந்து சாலையில் ஓடிய தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.

இதனால் தாயமங்கலம் பகுதி சாலை ஆறுபோல் காட்சியளித்தது. தற்போது கோடைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதற்கு முன்பாகவே இந்த பகுதியில் குடிநீரை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தாயமங்கலம் பகுதியில் நீரேற்று நிலையத்தில் பழுதடைந்த மின்மோட்டாரையும், குழாய் உடைப்பையும் நிரந்தரமாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்