சமூக இடைவெளியை பின்பற்றாததால் போலீசாரின் கண்காணிப்புடன் நடந்த இறைச்சி வியாபாரம்

அருப்புக்கோட்டையில், சமூக இடைவெளியை பின்பற்றாததால் 2 கடைக்கு ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டு அவர்களது கண்காணிப்பில் இறைச்சி வியாபாரம் நடந்தது.

Update: 2020-04-12 22:00 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நகரில் ஆங்காங்கே இறைச்சிகடை அமைத்து விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பொருட்கள் வாங்க அனுமதித்தனர். காய்கறி மார்க்கெட் பகுதியிலும், இறைச்சி கடைகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்ததால் கோட்டாட்சியர் செல்லப்பா, தாசில்தார் பழனிசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொண்ட குழு, கடை உரிமையாளர்களை அழைத்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் காய்கறி மார்க்கெட்டை தனியார் பள்ளியிலும், இறைச்சிகடை அனைத்தையும் ரெயில்வே மேம்பாலம் பகுதியிலும் தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்ய உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இறைச்சிகடைகளில் கூட்டம் திரண்டது. சமூக இடைவெளியை பின்பற்றாமல் இறைச்சி வாங்கி சென்றனர். இதனைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் இறைச்சி கடைகளை தனித்தனியாக அமைத்து வியாபாரம் செய்ய அறிவுறுத்தினார். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கட்டம் வரைந்து விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டார். 40-க்கும் மேற்பட்ட போலீசாரை பணியில் அமர்த்தி 2 இறைச்சிகடைக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு அவர்களது கண்காணிப்பில் வியாபாரம் நடந்தது.

வத்திராயிருப்பில் ஊருக்குள் செயல்பட்ட இறைச்சி கடைகள் தற்போது புதிய பஸ் நிலையத்தில் இயங்கி வருகிறது. நேற்று ஈஸ்டர் பண்டிகை என்பதால் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. கொரோனா உக்கிரத்தை கொஞ்சமும் உணராமல் இறைச்சி கடைகளிலும், மீன் கடைகளிலும் குவிந்தனர். சமூக இடைவெளியை இந்த இடங்களில் மருந்துக்கு கூட பலர் பின்பற்றாதது வேதனைக்குரியதாக இருந்தது.

வத்திராயிருப்பில் தொடக்கத்தில் போலீசார் கடும் கெடுபிடி காட்டினர். சில நாட்களாக கெடுபிடி குறைந்ததால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசுவதும் சர்வ சாதாரணமாக வாகனங்களில் சென்று வருவதும் தொடங்கிவிட்டது.

மேலும் செய்திகள்