பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படாததால் படகில் தவிக்கும் 25 மீனவர்கள்
பாம்பன் தூக்குப்பாலம் திறக்கப்படாததால் பாம்பன் கடலில் படகில் நாகை மீனவர்கள் 25 பேர் தவித்து வருகின்றனர்.
ராமேசுவரம்,
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடந்த மாதம் நாகப்பட்டினத்தை சேர்ந்த 25 மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடி தொழிலுக்காக 2 பெரிய விசைப்படகுகளில் சென்றுள்ளனர். அவர்கள் மீன்களுடன் மீண்டும் கொச்சி திரும்பி வந்துள்ளனர். ஆனால் கொரோனா பீதியால் நாகையை சேர்ந்த 2 படகு மற்றும் மீனவர்களும் கரைக்கு வர அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 2 படகுடன் 25 மீனவர்களும் சொந்த ஊரான நாகப்பட்டினம் செல்ல பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடக்க பாம்பன் கடல் பகுதிக்கு வந்தனர். ஊரடங்கு காரணமாக ரெயில்வே தூக்குப்பாலம் திறக்கப்படாததால் அவர்கள் சில நாட்களாக படகிலேயே தங்கி தவித்து வருகின்றனர்.
படகில் உள்ள உணவுபொருட்களும் குறைந்து வருவதால் மீனவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே படகில் தவிக்கும் நாகையை சேர்ந்த மீனவர்கள் படகுடன் கடந்து செல்ல பாம்பன் தூக்குப்பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாம்பனில் உள்ள நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள் உள்ளிட்டோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.