திருவள்ளூர் மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா உறுதி - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட் டத்தில் இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2020-04-12 22:45 GMT
திருவள்ளூர், 

இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இவர்கள் வசித்த பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நோய் பரவாமல் தடுக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீல் வைக்கப்பட்டு, யாரும் வெளியே செல்லவும், வெளிநபர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வாயிலாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பகுதிகளில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளும், கடுமையான சுவாச குறைபாடுகள் இருப்பதாக தானாக முன்வந்தால் அவர்களுக்கு டாக்டர்கள் மூலம் உரிய பரிசோதனை செய்யப்பட்டு முக கவசங்கள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என கண்டறிய பூதூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 106 பேரும், பூந்தமல்லியில் உள்ள பொதுசுகாதார நிறுவனத்தில் 56 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மொத்தம் 3,849 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இவர்களை கண்காணிக்க 48 மருத்துவ கண்காணிப்பு குழுக்களும், 1,885 சுகாதார பணியாளர்களும் மாவட்டம் முழுவதும் களப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நோய் தொற்று பரவாமல் தடுக்க நாள் ஒன்று 320 லிட்டர் கிருமி நாசினியும், 412 லிட்டர் ஹைப்போ குளோரைடும் தெளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்