படிப்படியாக குறைந்து வருகிறதா? - மதுரையில் 3 நாட்களாக கொரோனா பாதிப்பில்லை

மதுரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பில்லை என மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-04-12 23:30 GMT
மதுரை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது 14-ந் தேதியுடன் முடிவடையுமா? என்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் நேற்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுபோல் நேற்று முன்தினமும், அதற்கு முந்தைய நாளும் மதுரையில் எந்தவித பாதிப்பும் இல்லை. இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆகவே இருந்து வருகிறது. அதில் 3 பேர் குணமடைந்து தங்களது வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 22 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மதுரையில் கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது பொதுமக்கள் மற்றும் டாக்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். அவர்களுக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்த 3 பேர் முற்றிலும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். மதுரையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறுபுறம் பெரும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் இருக்கிறது. இதனால் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா அறிகுறிகளுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. வந்த பின்னர்தான் அவர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை கூற முடியும். இதுபோல் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கும் சந்தேகத்தின் பேரில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கு மூலம் கொரோனாவால் ஏற்படவிருந்த பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும். எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் தேவையின்றி சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும். கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்தால் இந்த நோயின் பாதிப்பு அதிகரிக்கும். இதனால் அனைவரும் ஒத்துழைப்பு தந்து இந்த வைரசை விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்