அனல் பறக்கும் கோடை வெயில்: வேகமாக குறைந்து வரும் பாபநாசம் அணை நீர்மட்டம்
அனல் பறக்கும் கோடை வெயில் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள முக்கிய அணை பாபநாசம் அணையாகும். இந்த அணையின் மூலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 143 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர் மட்டம் கடந்த சில தினங்களாக, அனல் பறக்கும் வெயிலால் வேகமாக குறைந்து வருகிறது.
கடந்த 10-ந் தேதி 63.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 62.15 அடியாக குறைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து அணைக்கு வினாடிக்கு 75.81 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 304.75 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோன்று 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 74.08 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 81.38 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணையில் குடிநீருக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை வைத்து தான் கோடை காலத்தை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.