கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

தென்காசியில் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-04-12 22:15 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 3 பேர் கொரோனா தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புளியங்குடியைச் சேர்ந்த ஒருவரும் உள்ளார். எனவே புளியங்குடி நகரசபை முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 

மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகத நாதன், தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், நகரசபை ஆணையர் சுரேஷ், தாசில்தார் அழகப்பராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புளியங்குடியில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் முறைகள், தனிமைப்படுத்தப் பட்டவர்களின் வீடுகளை கண்காணித்தல், புதிதாக காய்ச்சல் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்தல், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி இருப்பவர்களை கண்காணித்தல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்