தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை - வியாபாரிகள் தகவல்
தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில், அந்த கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இருப்பு குறைந்த நேரத்திலும், அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் கடைகளுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதேநேரத்தில் பொருட்களின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது.
ஊரடங்கு பிறப்பிக்கும் முன்பு ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட 100 கிலோ தொலி பருப்பு நேற்று ரூ.10 ஆயிரத்துக்கும், ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட உருட்டு பருப்பு ரூ.13 ஆயிரத்துக்கும், ரூ.8 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப்பருப்பு ரூ.11 ஆயிரத்துக்கும், ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப்பயறு 1-வது ரகம் ரூ.12 ஆயிரத்துக்கும், ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட பாசிப்பயறு 2-வது ரகம் ரூ.6 ஆயிரத்து 500-க்கும், ரூ.8 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு 1-வது ரகம் ரூ.10 ஆயிரத்து 500-க்கும், ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட துவரம்பருப்பு 2-வது ரகம் ரூ.10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதே நேரத்தில் ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஆஸ்திரேலியா பட்டாணி பருப்பு ரூ.10 ஆயிரமாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. 100 கிலோ உளுந்து தொடர்ந்து ரூ.6 ஆயிரத்து 500-க்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தூத்தக்குடியில் ஊரடங்கு பிறப்பித்தபோது, மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் திரண்டனர். ஆனால் தற்போது மளிகை கடைகளில் மக்களின் கூட்டம் குறைந்து விட்டது. பெரும்பாலான மக்கள் மளிகை பொருட்களை வாங்கி இருப்பு வைத்து உள்ளனர். மேலும் ரேஷன் கடைகளில் பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்ட பிறகு மக்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. பொதுவாக பருப்பு வகைகள் ஏப்ரல் மாதத்துக்கு பிறகுதான் வரத்து அதிகரிக்கும். இதனால் அதன்பிறகே விலை குறையும். தற்போது இருப்பு குறைந்து இருப்பதால் விலை சற்று அதிகரித்து உள்ளது. வடமாநிலத்தில் இருந்து சரக்குகள் கொண்டு வரும்போது, வழக்கமான வாடகையை விட தற்போது கூடுதல் வாடகை கொடுக்க வேண்டி உள்ளது. இதனாலும் பொருட்கள் விலை அதிகரித்து உள்ளது. மற்றபடி பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பும் இல்லை என்றார்.