ஆத்தூர் அருகே, ஜவ்வரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

ஆத்தூர் அருகே ஜவ்வரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-04-12 07:51 GMT
ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமம் வடகாடு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான சேகோ ஆலை உள்ளது. இந்த ஆலையில் மரவள்ளிக் கிழங்கை அரைத்து மாவு மற்றும் ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த ஆலை குறைந்த அளவிலான தொழிலாளர்களை கொண்டு இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஜவ்வரிசி ஆலையில் சதாசிவபுரம் வடக்குகாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45), இவரது அண்ணன் அல்லிமுத்து என்பவரது மகன் கார்த்தி (20) உள்பட சிலர் நேற்று வேலை பார்த்தனர். அப்போது நேற்று அதிகாலை மரவள்ளிக்கிழங்கை அரைத்த பிறகு அழுக்கு மாவு தொட்டிக்கு செல்லும் குழாயின் கேட் வால்வை திறக்க கார்த்தி முயன்றார். அப்போது குழாயில் திடீரென்று விஷவாயு கசிந்துள்ளது. இதனால் கார்த்தி மயங்கி தொட்டிக்குள் விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், கார்த்தியை காப்பாற்ற ஓடிச்சென்று தொட்டியில் இறங்கினார். அப்போது அவரையும் விஷவாயு தாக்கியது. இதில் ஆறுமுகம், கார்த்தி 2 பேரும் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் ஜவ்வரிசி ஆலைக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் ஆறுமுகம், கார்த்தி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ஆறுமுகத்துக்கு செல்வி என்ற மனைவியும், வாசு, பரணி என்ற 2 மகன்களும் உள்ளனர்.

விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் ஆத்தூர் சதாசிவபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்