கடலூர் மாவட்டத்தில், மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய கணவருடன் தொடர்பில் இருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் நேற்று முன்தினம் வரை உள்ள நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் கொரோனா அறிகுறி காணப்பட்ட 229 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 102 பேரின் பரிசோதனை அறிக்கை வந்ததில் 3 வயது பெண் குழந்தை உள்பட 14 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 88 பேருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் 127 பேரின் உமிழ் நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வரவேண்டி இருந்தது.
இந்த நிலையில் நேற்று 27 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை வந்தது. இதில் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பதும் மீதம் உள்ள நபர்களுக்கு கொரோனா இல்லை என்பதும் தெரியவந்தது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பெண் டெல்லி மாநாடு சென்று திரும்பி வந்த அவரது கணவருடன் தொடர்பில் இருந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி இதுவரை கொரோனா அறிகுறி காணப்பட்ட 233 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி சேகரித்து அனுப்பப்பட்டதில் 133 பேரின் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் 118 பேருக்கு கொரோனா இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 100 பேரின் உமிழ்நீர் பரிசோதனை அறிக்கை வர வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.