கோவையில், கொரோனா பாதிப்புக்கு கேரள முதியவர் பலி - தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடல்

கோவையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த முதியவர் பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.

Update: 2020-04-11 22:30 GMT
கோவை,

கேரள மாநிலம் பாலக்காடு நூரணி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் வயிற்று வலி காரணமாக கடந்த 3-ந் தேதி கோவை வந்தார். அவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். இதில் அவருக்கு இதயகோளாறு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த 5-ந் தேதி கோவை காந்திபுரம் ஜி.பி.சிக்னல் அருகே உள்ள சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் கேரள மாநிலத்தில் இருந்து வந்ததால் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனே கடந்த 7-ந் தேதி அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தனியார் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சுகாதாரதுறையினர் மூலமாக அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரை அங்கேயே வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென்று இறந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட கேரள முதியவர் பலியான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ராஜா மணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதியவர், உயிரிழந்ததால் அவர் சிகிச்சை பெற்ற சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் என 20 பேரை மருத்துவமனையிலேயே வைத்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.

முதியவர் இதற்கு முன்பு வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அங்கும் ஆய்வு செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள் ஆகியவை மக்கள் நல்வாழ்வு துறையோடு இணைந்து, முறையாக தகவல் பரிமாற்றம் செய்து வரைமுறையின்படி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்த சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை ஜி.பி.சிக்னல் அருகே உள்ள சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவருக்கு சர்க்கரை நோய் மற்றும் இதய கோளாறு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி அவரின் உடல், பாதுகாப்பான முறையில் கோவையிலேயே தகனம் செய்யப்பட்டது. இது குறித்து, பாலக்காட்டில் உள்ள சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவரின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றனர்.

மேலும் செய்திகள்