உணவுப்பொருட்கள் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த வடமாநில தொழிலாளர்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால் இதில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர்,
தமிழகத்தின் பல மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநில தொழிலாளர்கள் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொடக்கத்தில் பனியன் நிறுவனங்களில் வேலை செய்யவே திருப்பூர் நோக்கி படையெடுத்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது கிடைத்த வேலையை செய்யும் அளவுக்கு வந்து விட்டனர். சாதாரண டீக்கடை முதல் ஓட்டல், விடுதி, பல்பொருள் அங்காடி, கட்டிடவேலை, பெட்டிக்கடை, எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, சாலையோரம் பொம்மைகள் விற்பது வரை எங்கு பார்த்தாலும் வடமாநில தொழிலாளர்களின் தலைகளையே காணமுடிகிறது.
அதுமட்டுமின்றி கோழிப்பண்ணை, அரிசி ஆலை, எண்ணெய் ஆலை, விசைத்தறி கூடங்களிலும் வடமாநிலத்தவர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். வடமாநிலத்தவர்கள் இல்லாமல் திருப்பூரில் தொழில்வளர்ச்சி இல்லை என்ற அளவுக்கு இவர்கள் நீக்கமற நிறைந்து விட்டார்கள்.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு விட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி அவசர அவசரமாக புறப்பட்டு சென்று விட்டனர். ஆனால் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு ரெயில் போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் திருப்பூரிலேயே இருக்கிறார்கள்.
ஊரடங்கை அமல்படுத்தி 2 வாரங்களை கடந்து விட்டது. கையில் இருக்கும் பணம், உணவுப்பொருட்களை வைத்து சாப்பிட்டு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது உணவுக்காக கலெக்டர் அலுவலகத்தின் கதவை தட்டி வருகிறார்கள். தொடக்கத்தில் ஒவ்வொரு தாலுகா வாரியாக மாவட்ட நிர்வாகம் தாசில்தார்களை நியமித்து வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்தனர். உணவுப்பொருட்கள் இல்லாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக உணவுப்பொருட்களை கொண்டு சேர்த்தனர்.
வருவாய்த்துறையின் கணக்கெடுப்புப்படி பார்த்தால் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்தவர்கள் 42 ஆயிரத்து 106 பேரும், ஒடிசாவை சேர்ந்தவர்கள் 36 ஆயிரத்து 157 பேரும், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் 10 ஆயிரத்து 722 பேரும், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் 11 ஆயிரத்து 930 பேரும், அசாமை சேர்ந்தவர்கள் 6 ஆயிரத்து 530 பேரும், மராட்டியத்தை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 367 பேரும், பஞ்சாபை சேர்ந்தவர்கள் 949 பேரும், தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் 931 பேரும், கேரளாவை சேர்ந்தவர்கள் 1,695 பேரும், குஜராத்தை சேர்ந்தவர்கள் 735 பேரும், ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் 733 பேரும், மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 414 பேரும், ஜார்கண்டை சேர்ந்தவர்கள் 4 ஆயிரத்து 965 பேரும், திரிபுரா, மணிப்பூர், மிசோரம், ஜம்மு, மேகாலயா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரத்து 665 பேர் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினருக்கு தலா 15 கிலோ அரிசி, 1 கிலோ சமையல் எண்ணெய், 1 கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தன்னார்வ அமைப்பினர் உதவியோடு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பு படி 50 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பனியன் நிறுவனத்தின் கீழ் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்தினர் அவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
அவ்வாறு வழங்கப்பட்டும் கூட உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் வடமாநிலத்தவர்கள் பல பகுதிகளில் தவித்து வருகிறார்கள். தங்களுக்கு உணவுப்பொருட்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் வந்து முறையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை பல்லடம், கரைப்புதூர், வாழைத்தோட்டம், திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு பெண்கள் கல்லுரி பின்புறம் என பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். அவர்களின் பெயர் விவரங்களை குறிப்பிட்டு விரைவில் உணவுப்பொருட்கள் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் உணவுப்பொருட்கள் வேண்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வராத சூழ்நிலையில் தற்போது கடந்த 3 நாட்களாக அதிகப்படியானவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்து வருகிறார்கள். அதிகாரிகள் கொடுத்த உணவுப்பொருட்கள் போதுமானதாக இல்லை என்றும், எங்களுக்கு கூடுதலாக உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் வடமாநிலத்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிகாரிகளின் கணக்கெடுப்பையும் தாண்டி வடமாநிலத்தவர்கள் திருப்பூர் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு உணவுப்பொருட்களை வருவாய்த்துறையினர் கொடுத்து வந்தாலும் முறையாக அவர்களிடம் சென்று சேர்ந்ததா என்பது புரியாத புதிராக உள்ளது. பல பகுதிகளில் உணவுப்பொருட்களை வழங்கினாலும் கூட தங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கவில்லை என்று வடமாநிலத்தவர்கள் அதிகாரிகளிடம் மீண்டும், மீண்டும் புகார் தெரிவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் உணவுப்பொருட்கள் வினியோகம்செய்யும் அதிகாரிகள் மிகப்பெரிய குழப்பத்தில் சிக்கித்தவித்து வருகிறார்கள். வடமாநிலத்தவர்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டு சேர்ப்பது அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கும் பட்சத்தில் வடமாநிலத்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குவது மாவட்ட நிர்வாகத்துக்கும் சவாலான பணியாகவே அமையும். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 50 ஆயிரம் வடமாநிலத்தவர்கள் இருப்பதாக வருவாய்த்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இப்போதே உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பசியோடு ஆங்காங்கே வீதியில் வடமாநிலத்தவர்கள் சுற்றித்திரிந்து வருகிறார்கள். அவர்களின் வயிற்றுத்தீ அணைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பட்டினியால் தவிக்கும்போது வடமாநிலத்தவர்கள் வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்பு இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தொடர்ச்சியாக வழங்கினால் மட்டுமே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இல்லையென்றால் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் பிரச்சினை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.