அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதி
தனியார் ஆஸ்பத்திரியில் பகுதி நேரமாக வேலை செய்த அரசு ஆஸ்பத்திரி டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
திரு.வி.க. நகர்,
சென்னை பெரவள்ளூரை அடுத்த பெரியார் நகரில் அரசு புறநகர் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என 500 முதல் ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இங்கு 11 டாக்டர்கள், 19 செவிலியர்கள், பணியாளர்கள் என 98 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் பொது மருத்துவம் பார்க்கும் 44 வயதான டாக்டர் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த அவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் பகுதி நேரமாக வேலை செய்து வந்ததும், அந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளரும், டாக்டருமான ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று இருந்த நிலையில் அவரிடமிருந்து இவருக்கு பரவியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் அந்த அரசு ஆஸ்பத்திரியில் பணி செய்த சக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 97 பேரும் தற்போது ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான இந்த டாக்டரிடம் இந்த அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்ற புறநோயாளிகள் குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.