மின்கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது
திருவள்ளூர் அருகே வைக்கோல் ஏற்றி லாரி, உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம் பத்தூர் ஒன்றியம் இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அதே பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான வயலில் நேற்று நெல் அறுவடை செய்தார். பின்னர் வயலில் இருந்த 160 கட்டு வைக்கோல் போரினை ஒரு லாரியில் ஏற்றி திருத்தணிக்கு அனுப்பி வைத்தார். லாரியை ஆந்திராவைச் சேர்ந்த மனோகரன் (வயது 45) என்பவர் ஓட்டிச் சென்றார்.
வைக்கோல் ஏற்றி வந்த லாரி, வயலில் இருந்து சிறிது தூரம் வந்தவுடன் வயலின் மேலே தாழ்வாக சென்ற உயர்அழுத்த மின்சார கம்பியில் உரசியதால், லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மனோகரன் கீழே இறங்கி விட்டார்.
பின்னர் அங்கிருந்த வாலிபர்கள் சிலர் லாரியில் எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகளை கம்பு மூலம் கீழே தள்ளி விட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தீயில் எரிந்த வைக்கோல்களை லாரியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் லாரியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வைக் கோல் கட்டுகள் தீயில் எரிந்து நாசமானது. லாரியும் தீயில் லேசாக சேதமானது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. தீயணைப்பு வீரர் கள் உடனடியாக தீயை அணைத்து விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.