ரூ.100 காய்கறி தொகுப்புடன் பலா, தர்பூசணி வழங்க ஏற்பாடு - அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கடலூரில் ரூ.100 காய்கறி தொகுப்புடன் பலா, தர்பூசணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

Update: 2020-04-11 07:50 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு மாவட்டத்தில் இதுவரை செய்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம் கேட்டறிந்து, ஆய்வு நடத்தினார். பின்னர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இது பற்றி அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர் களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் அரசு அலுவலர்கள் அயராது தங்களது பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர்.

மேலும் தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பலா, தர்பூசணி, வாழை ஆகியவற்றை நேரடி நெல்கொள்முதல் செய்து கடலூர் நகராட்சியில் வீடுகள் தோறும் வாகனங்கள் மூலம் ரூ.100 காய்கறி தொகுப்புடன் இவைகளையும் சேர்த்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் நகராட்சியில் 45 வார்டுகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மற்றும் பிளச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. இதை துரிதப்படுத்தும் விதமாக கூடுதலாக 6 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சுழற்சி முறையில் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் லைசால் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசை தெளிப்பான் மூலம் வீடுகள் தோறும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று கருதினால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி 1077 -க்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் நலன் கருதி 1000 முக கவசங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் கலெக்டர் அன்புசெல்வனிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட பலாப் பழங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். தொடர்ந்து கடலூர் டவுன்ஹால் அருகில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்த பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, கடலூர் நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, முன்னாள் நகரசபை தலைவர் குமரன், நகரசபை முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், முன்னாள் கவுன்சிலர் கந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்