ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சூறைக்காற்றில் வாழை, கரும்புகள் சாய்ந்து சேதம்
ரிஷிவந்தியம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சூறைக்காற்றில் வாழை, கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், எடுத்தனூர், வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது நிலத்தில் வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகை பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். தற்போது அவை நன்று செழித்து வளர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதில் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. மேலும் ஏராளமான பப்பாளி மரங்களும் முறிந்து விழுந்தன. இதேபோல் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்களும் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், நான் சுமார் 2,800 வாழைகளை பயிரிட்டிருந்தேன். அவற்றுக்கு உரமிட்டு பராமரித்து வந்ததால், நன்கு செழித்து வளர்ந்தது. ஆனால் நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்றில் அனைத்து வாழைகளும் அடியோடு சாய்ந்து சேதமடைந்து விட்டது. இதனால் எனக்கு சுமார் ரூ.5 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எனது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவே அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.