மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

Update: 2020-04-11 07:13 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 1 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் இன்றும், 14-ந் தேதியும் தென் கிழக்கு திசையில் இருந்து வீசும். நாளை வடகிழக்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கிழக்கு திசையில் இருந்தும் வீசும்.

வெப்ப நிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 4 நாட்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்து பகல் வெப்பநிலை குறைந்தாலும், பெரும்பாலான சமயங்களில் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் கொண்ட கோடை காலமே ஆதிக்கம் செய்யும். மாலையில் காற்று வேகமாக அடிப்பதால் பகல் வெப்பத்தின் தாக்கம் தணிய வாய்ப்பு உள்ளது.

கடந்்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகிப்பதோடு, தீவனத்தில் சமையல் சோடா மற்றும் தாது உப்பு கலவை உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்