கோவையில், ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்வு

கோவையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-10 22:15 GMT
கோவை, 

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் கொரேனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது. இதுதவிர தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் பள்ளியிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்று வந்த கோவையை சேர்ந்த இளம் பெண்தான் முதன்முதலாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதேபோல் ஈரோட்டை சேர்ந்த பெண் டாக்டர், அவரது 10 மாத குழந்தை, தாயார் மற்றும் வீட்டில் வேலைப்பார்த்த பெண் மற்றும் திருப்பூர் தொழில் அதிபர் ஆகியோர் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

மேலும் கடந்த 5-ந் தேதி ஒரே நாளில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் ஆவார்கள். தொடர்ந்து 6-ந் தேதி துபாய் சென்று வந்த கோவையை சேர்ந்த ரெயில்வே என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 7-ந் தேதி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவருடன் சேர்த்து கோவை மாவட்டத்தில் 60 பேர் கொரோனா பாதிப்புடன் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 21 பேர் பெண்கள், 3 ஆண்கள், 2 ஆண் குழந்தைகள். இதில் 4 வயது சிறுவன் உள்பட 20 பேர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கள். மீதமுள்ளவர்கள் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் கள். இவர்களில் 6 பேரில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பெண்களும், அதே பகுதியை சேர்ந்த சிறுவனும் அடங்குவர். அத்துடன் இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்.

தற்போது இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்