கொரோனா வார்டில் சிகிச்சை: மனைவி கொண்டு வந்த பிரியாணியை அனுமதிக்காததால் வாலிபர் ஆத்திரம் - கண்ணாடியை உடைத்து ரகளை

கொரோனா உறுதியாகி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வாலிபருக்கு, அவரது மனைவி கொண்டு வந்த பிரியாணியை கொடுக்க அனுமதிக்கவில்லை. இதனால் அவர் ஆத்திரத்தில் கண்ணாடியை உடைத்து ரகளை செய்தார்.

Update: 2020-04-10 22:30 GMT
கோவை,

கோவையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதன்படி கோவையில் நேற்று வரை மொத்தம் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தவிர அங்கு கொரோனா சந்தேகம் உள்ளவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் உணவையே சாப்பிடுவார்கள். சிலருக்கு அவர்களது வீடுகளில் இருந்து உணவு வந்து கொண்டு இருந்தது. அவ்வாறு வெளியில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்படும் உணவினால் அவர்களுக்கு ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்வது?, எனவே சிகிச்சையில் இருப்பவர்களுக்கு வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை நிறுத்தலாமா? என்று டாக்டர்கள் ஆலோசனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வரும் 27 வயது வாலிபருக்கு, அவரது மனைவி நேற்று இரவு பிரியாணி கொண்டு வந்தார். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்று டாக்டர்கள் ஆலோசனையில் உள்ளனர். எனவே, அந்த வாலிபருக்கு பிரியாணியை கொடுக்க அனுமதி வில்லை. மேலும் அந்த வாலிபர் எவ்வளவோ கேட்டுக்கொண்டும், பிரியாணியை கொடுக்க மருத்துவ ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், அங்கு தீயணைப்புக்காக தண்ணீர் செல்லும் குழாயை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கண்ணாடியை கையால் அடித்து உடைத்து ரகளை செய்தார். இதனால் அந்த கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அந்த வாலிபரின் கையிலும் காயம் ஏற்பட்டது.

இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கோவை சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இனி வெளியில் இருந்து சாப்பாடு கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் நேற்று கொரோனா தொற்று உறுதியான ஒரு சிலரின் குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறி இல்லை (நெகடிவ்) என்று தெரியவந்தது. இதனால் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று நர்சுகள் கூறினார்கள். அதற்கு கொரோனா தொற்று உறுதியானவர்கள் குழந்தைகளை தங்களுடன் தான் தங்க வைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அவர்களை சமரசம் செய்தனர். அதன்பிறகு அந்த குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்