லால்குடி, தொட்டியம் பகுதிகளில் சூறைக்காற்றுக்கு 30 ஆயிரம் வாழைகள் சேதம்
லால்குடி மற்றும் தொட்டியம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளி காற்றுக்கு 30 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்து சேதம் அடைந்தன.
லால்குடி,
திருச்சி மாவட்டம், லால்குடி, தொட்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பூவாளூர், பின்னவாசல், தெங்கால், திருமங்கலம், சாத்தமங்கலம், கூகூர், நன்னிமங்கலம் மேட்டுபட்டி காட்டூர் கொத்தமங்கலம் இடையாற்றுமங்கலம், காட்டூர், கொப்பாவளி, அன்பில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த வாழை களில் சுமார் 25 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்தன. இவற்றில் பல வாழைகள் குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தவையாகும்.
இதுபோல் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள வரதராஜபுரம், சித்தூர், கவுத் தரசநல்லூர், சீனிவாசநல்லூர், ஏரிகுளம், மகேந்திரமங்கலம், அலகரை, மணமேடு, திருஈங்கோய்மலை, முள்ளிப்பாடி, காட்டுப்புத்தூர், சீலைப்பிள்ளையார்புத்தூர், காடுவெட்டி, பாலசமுத்திரம், கார்த்திகைப்பட்டி, அரசலூர், திருநாராயணபுரம் உள்பட பல பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் வாழைகளும் சேதமடைந்தன.
ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்து வாழை சாகுபடி செய்துள்ள நிலையில், சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழைமரங்கள் சாய்ந்து முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதில் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் ஒரு சிலர் மட்டுமே வங்கிகள் மூலமாக வாழை காப்பீடு செய்துள்ளதாகவும், மீதமுள்ள விவசாயிகள் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் காப்பீடு செய்யாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு முழுமையாக நிவாரணம் வழங்கவும், தற்போது பருவ மழை முழுமையாக முடியாத நிலையில் மீதமுள்ள வாழை களை காப்பீடு செய்வது பற்றிய விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே வாழை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே கொரோனா தடை உத்தரவு காரணமாக வாழைப் பழங்கள் பழுத்து வீணாகி வருவதால் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில் தற்போது இந்த சூறாவளி காற்றால் ஒரே நாளில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.