பெரம்பலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் மழை: வாழைகள், மக்காச்சோளம், எள் செடிகள் சாய்ந்து நாசம் - வீடு, கடைகளின் மேற்கூரைகள் பறந்தன

பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் வாழைகள், மக்காச்சோளம், எள் செடிகள் சாய்ந்து நாசமாகின. வீடு, கடைகளின் மேற்கூரைகள் பறந்தன.

Update: 2020-04-10 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் பெரம்பலூர் நகரில் 5 இடங்களில் மின்மாற்றிகள் வெடித்து பழுதானது. வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் சில இடங்களிலும், திருமாந்துறை பகுதியில் ஒரு இடத்திலும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்தப்பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கின. வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வேப்பமரம், முருங்கை மரம் சாய்ந்து விழுந்தன. மேலும் வீடு, கடைகளில் மேற்கூரையான தகர ஷீட்டுகள் காற்றில் பறந்தன.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர், மேட்டாங்காடு, கோனேரிபாளையம், ஈச்சம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம் மற்றும் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் தாருடனும், மக்காச்சோளம், எள் செடிகளும் காற்றில் சாய்ந்து நாசமாகியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். குன்னம் தாலுகா பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. ஆலத்தூர் தாலுகாவில் பெய்த பலத்த மழைக்கு நாட்டார்மங்கலத்தை சேர்ந்த நடேசன் என்பவரின் ஆட்டு கொட்டகை சரிந்து விழுந்ததில் ஒரு ஆடு செத்தது. சூறாவளி காற்றுக்கு சாய்ந்த மின்கம்பங்களையும், பழுதான மின்மாற்றிகளையும் மின்சார ஊழியர்கள் நேற்று சீரமைத்ததையடுத்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில் அந்தந்த தாலுகா தாசில்தார்கள் மழையினால் ஏற்பட்ட பாதிப்பை கணக்கிட்டு வருகின்றனர். தேங்கியிருந்த மழைநீரை தூய்மை பணியாளர்கள் அகற்றி, தூய்மை பணிகளை மேற்கொண்டனர். ஆலம்பாடி கிராமத்தில் உள்ள தடுப்பணைக்கு தண்ணீர் வந்தது. அதில் சிறுவர்கள் விளையாடினர்.

இது குறித்து பெரம்பலூர் தாலுகா அம்மாபாளையத்தை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் பழ மார்க்கெட் மூடப்பட்டதால், ஒரு வாழை தார் ரூ.200-க்கு கூட விலை போகவில்லை. உள்ளூர் வியாபாரிகளிடம் தார்களை விற்பனை செய்தாலும் நஷ்டம் தான் ஏற்பட்டது. இந்நிலையில் சூறாவளி காற்றில் 2 ஆயிரம் வாழைகள் தாருடன் சாய்ந்து நாசமாகியுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு, சாய்ந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார்.

வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்த விவசாயி இளையராஜா கூறுகையில், எங்கள் தாலுகாவில் கிணற்று பாசனம் மூலம் நிறைய விவசாயிகள் வாழை மரங்கள், மக்காச்சோளம், எள் ஆகியவை பயிரிட்டிருந்தோம். சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள், கதிர் வர ஆரம்பித்த நிலையில் மக்காச்சோளம், எள் செடிகள் ஆகியவை அடியோடு சாய்ந்து விழுந்தன. ஊரடங்கால் ஏற்பட்ட பெரிய நஷ்டத்தை தொடர்ந்து, தற்போது சூறாவளி காற்று வீசியதாலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும், என்றார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

பெரம்பலூர்-102, எறையூர்-80, வி.களத்தூர்-65, வேப்பந்தட்டை-64, பாடாலூர்-52, லெப்பைக்குடிகாடு-35, செட்டிகுளம்-31, கிருஷ்ணாபுரம்-11, தழுதாழை-10, புதுவேட்டக்குடி-6, அகரம்சீகூர்-4.

மேலும் செய்திகள்