கொரோனா பரவுவதை தடுக்க ஊரின் எல்லையில் தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்திக்கொண்ட மக்கள்
கொரோனா பரவுவதை தடுக்க ஊரின் எல்லையில் தடுப்புகள் அமைத்து, அந்த மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் தங்களது வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டுவது, வேப்பிலை, மஞ்சள் அரைத்து தெளிப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனனர். கரூர் நகரில் 7 இடங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதில் கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள கொரோனா பாதிப்பு வீதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். எனினும் மக்கள் கொரோனாவை விரட்ட மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையை அதில் தோரணமாக கட்டி தொங்க விட்டுள்ளனர். வேப்பிலை சாற்றினை அருந்தி வருகின்றனர்.
இதேபோல் கரூர் அருகே காதப்பாறை காந்திநகர் மக்கள் தங்களது ஊரின் எல்லை பகுதியில் வெளிநபர்கள் யாரும் நுழையாதவாறு தடுப்புகள் அமைத்துள்ளனர். ரோட்டில் குப்பை தொட்டிகளையும் கவிழ்த்து போட்டுள்ளனர். அதேபோல் இந்த பகுதி மக்களும் வெளியே செல்லாமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றுவருபவர்கள் கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்தபிறகே ஊருக்குள் வருகின்றனர்.
இதேபோல் கொங்குநகர் அண்ணாசாலைமெயின்ரோட்டில் சீமைக்கருவேலமுட்களை வெட்டிபோட்டு சாலையை மறித்து வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு போட்டுள்ளனர். வெளிநபர்கள் யாரும் வந்தாலும் அவர்களை பற்றி விசாரித்தபிறகே உள்ளே அனுப்புகின்றனர். கரூர் அருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஊருக்குள் நுழையும் சாலையில் முள் வேலி தடுப்புகள் அமைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அனைத்து வீதிகளிலும் கிருமி நாசினி தொளித்து தங்களை தாங்களே பாதுகாத்து கொள்கின்றனர்.