திருச்சி அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ஈரோடு வாலிபர் குணமடைந்தார் - டாக்டர்கள், நர்சுகள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு வாலிபர் குண மடைந்தார். அவரை டாக்டர்கள், நர்சுகள் மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தனர்.
திருச்சி,
கடந்த மாதம் 22-ந் தேதி அதிகாலை துபாயில் இருந்து திருச்சி வந்த பயணிகளை விமானநிலையத்தில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 24 வயதுடைய வாலிபருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. உடனே அந்த வாலிபரை ஆம்புலன்ஸ் மூலம் விமான நிலையத்தில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, கொரோனாவுக்காக அமைக்கப்பட்ட தனிவார்டில் வைத்தனர். அங்கு அவருடைய ரத்த மாதிரி, சளி ஆகியவற்றை ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதில் அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வந்தனர். அதன்பிறகு 3 முறை அவருக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. 3 முறையும் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இருப்பினும் அந்த வாலிபர் டாக்டர்களின் அறிவுரையை கேட்டு தொடர்ந்து மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். இந்தநிலையில் கடைசியாக அவருக்கு செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஈரோடு வாலிபர் முழுமையாக குணம் அடைந்தார். இதையடுத்து அவர் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு பாதுகாப்பு கவசம் மற்றும் முக கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினருக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார். அவரை டீன் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏகநாதன் மற்றும் டாக்டர்கள், நர்சுகள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.
இது குறித்து டீன் வனிதா கூறுகையில், “அவருக்கு 3 முறை ரத்த மாதிரியை பரிசோதனை செய்தோம். 3 முறையும் பாசிட்டிவ் என்று தான் வந்தது. ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து சிகிச்சை அளித்தோம். எங்களுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்தார். செல்போன் கூட உபயோகிக்கவில்லை. தற்போது அவர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளார்” என்றார்.