கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? கொரோனா பாதித்த பகுதிகளூக்கு ‘சீல்’ - கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கர்நாடகத்தில் கொரோனா பாதித்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஊரடங்க உத்தரவு மேலும் நீட்டிக்கப் படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
பெங்களூரு,
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியா விலும் வேகமாக பரவி வருகிறது.
இதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று வரை 201 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் 6 பேர் இந்நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலும், கொரோனாவை எதிர்கொள்ளவும் கர்நாடக அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதுபோல் கர்நாடகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை 30-ந்தேதி வரை நீட்டிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு?
சமீபத்தில் நடந்த கர்நாடக மந்திரி சபை கூட்டத்தில் பெரும்பாலான மந்திரிகள் கர்நாடகத்தில் ஊடரங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது கருத்து தெரிவித்த முதல்-மந்திரி எடியூரப்பா இதுபற்றி 11-ந்தேதி (அதாவது இன்று) பிரதமர் மோடியுடன் பேசி இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கொரோனா பாதித்தோர் அதிகமுள்ள பெங்களூருவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெங்களூரு மாநகர் முழுவதும் மெயின் ரோடுகளை தவிர்த்து குடியிருப்புகளில் உள்ள அனைத்து சாலைகளையும் மூடி போலீசார் சீல் வைத்தனர். அத்துடன் கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
சாலைகளுக்கு ‘சீல்’ வைப்பு
அந்தப் பகுதி மக்கள் வெளியே வரவும், வெளிநபர்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்றும், வீட்டை விட்டு தேவையில்லாமல் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே நடைமுறை கொரோனா பாதித்த பெங்களூரு புறநகர், மைசூரு, குடகு, சிக்பள்ளாப்பூர், உத்தரகன்னடா, தட்சிணகன்னடா, தாவணகெரே, உடுப்பி, பல்லாரி, மண்டியா, பாகல்கோட்டை, பீதர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மக்கள் நடமாட தடையா?
இந்த நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பெங்களூரு நகர் முழுவதும் மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உண்மை அல்ல.
பெங்களூரு நகர் முழுவதும் மக்கள் வெளியில் நடமாட தடை விதிப்பது குறித்து மாநில அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பெங்களூருவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட பாபுஜிநகர், பாதராயனபுரா ஆகிய 2 வார்டுகளில் தான் மக்கள் முழுமையாக வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
யாரும் பீதியடைய வேண்டாம்
மீதமுள்ள 196 வார்டுகளில் ஊரடங்கு தான் அமலில் உள்ளது. அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வருவதற்கு தடை எதுவும் இல்லை. தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை வைத்து யாரும் பீதியடைய வேண்டாம்.
தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காய்கறி வாங்க குவிந்த மக்கள்
14-ந்தேதிக்கு பிறகு பெங்களூருவில் மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானதால், நேற்று நகரில் பல்வேறு பகுதிகளில் மக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்தனர். அவர்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தனர்.