நிவாரண பொருட்களில் பா.ஜனதா ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம்: அரசின் வரிப்பணத்தில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கண்டனம்
நிவாரண பொருட்களில் பா.ஜனதா ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரத்தில் அரசின் வரிப்பணத்தில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா வைரசால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மத்திய அரசு, அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் பேசி வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்களிடம் நான் நிலைமை குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். என்னென்ன நடக்கிறது என்பது பற்றி விவரங்களை கேட்டு பெற்றேன்.
அனைத்து விஷயங்களும் ஆன்லைன் மூலமாகவே சேவைகள் வழங்கப்படுகின்றன. அரசு ஆற்றி வரும் பணிகளில் ஏதாவது குறைகள் இருந்தால், அதுகுறித்து அரசுக்கு தெரிவிப்போம். அந்த குறைகளை சரிசெய்வதை நாம் உறுதி செய்வோம். கட்சியில் அனைத்து தலைவர்களின் நம்பிக்கையையும் பெற்று பணியாற்றுவோம்.
அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் வருகிற 14-ந் தேதி நடக்கிறது. அவர் அரசியல் சாசனத்தை உருவாக்கி கொடுத்தார். அதன்படி நாம் வாழ்ந்து வருகிறார்கள். அவர் வகுத்து கொடுத்த அரசியல் சாசனம் தான் நமது நாட்டின் சொத்து. அந்த நாளில் அவரை நாம் நினைத்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் பெங்களூருவில் 20 பேர் சேர்ந்து ஒரு நிமிடத்தில் நிகழ்ச்சியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அனைவரும் கூட்டத்தில் இருந்து சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும்.
அனைத்து மாவட்டம் மற்றும் தாலுகா தலைநகரங்களில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைவரும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். நமது நாட்டில் கொரோனா உயிர்க்கொல்லி பரவி வருகிறது. டாக்டர்களிடம் பேசினேன். ரத்தம் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவித்தனர். அதனால் மாநில மக்கள் ரத்த தானம் வழங்க தயாராக இருக்க வேண்டும்.
அக்ஷய பாத்திர திட்டத்தில், ஒரு அமைப்பினர் உணவு வழங்குகிறார்கள், அதை பா.ஜனதாவினர் தங்கள் கட்சி தலைவர்களின் பட ஸ்டிக்கர்களை ஒட்டி வினியோகம் செய்கிறார்கள். இது சரியல்ல. பா.ஜனதாவினர் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் தகவல் இருக்கிறது. ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரியிடம் வலியுறுத்தியுள்ளேன். அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதற்காக காத்திருக்கிறோம்.. இந்த விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை.
ஆனால் அரசின் வரிப்பணத்தில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது. முன்னாள் சுகாதாரத்துறை மந்திரிகள் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம். மாநிலத்தில் உணவு பொருட்களை மக்களுக்கு சரியாக வினியோகம் செய்யவில்லை. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான அளவுக்கு பாதுகாப்பு கவசங்கள் இல்லை.
எல்லாவற்றையும் குறை சொல்லக்கூடாது என்பதால் அமைதியாக இருக்கிறேன். இது குறை சொல்லும் நேரம் இல்லை. மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும். கொரோனா விஷயத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் தவறான பிரசாரம் செய்தனர். இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.