கொரோனா தொடர்பாக அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்துவதா? - சிவசேனா எதிர்ப்பு
கொரோனா தொடர்பாக அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள சிவசேனா ஒரே ஒரு அதிகார மையம் தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இந்த வார தொடக்கத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மண்டல கமிஷனர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
போர்க்காலம் போன்ற சூழலில்(கொரோனா வைரஸ் நெருக்கடி) அரசு நிர்வாகத்துக்கு வழிமுறைகளை வழங்குவதற்கு ஒரே ஒரு அதிகார மையம் தான் இருக்க வேண்டும். மத்தியில் பிரதமருக்கும், மாநிலத்தில் முதல்-மந்திரிக்கும் தான் அந்த அதிகாரம் இருக்க வேண்டும்.
இங்கு எந்தவிதமான கசப்பும் இல்லை. யாராவது ஒரு இணையான அரசாங்கத்தை நடத்தினால் அது குழப்பத்திற்கு வழிவகுக்கும். சரத்பவாரை போன்ற ஒரு மூத்த தலைவர் இதுபோல அரசாங்கம் நடப்பதாக உணர்ந்தால் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எந்த நேர அட்டவணையும் பின்பற்றாத ஒரு கவர்னர் மராட்டியத்துக்கு கிடைத்து உள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் அதிகாலையில் பதவி ஏற்றதை மக்கள் கண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தை குறைசொல்வதற்காக ராஜ்பவனுக்கு அடிக்கடி செல்வதாக எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவை சிவசேனா விமர்சித்து உள்ளது.