ஈரோட்டில் கொட்டித்தீர்த்த மழை; அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் வெளியேறியது
ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு கொட்டித்தீர்த்த மழையால் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் வெளியேறியது.
ஈரோடு,
கோடைகாலம் தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்தது. வெப்பத்தை தணிக்க மழை வருமா? என்று மக்கள் ஏங்கிக்கொண்டு இருக்கும்போது, எதிர்பாராமல் கொரோனா தொற்று வந்து விட்டது. கோடை வெயில் இருந்தால் கொரோனா பரவாது என்ற தகவலால், கொரோனாவுக்கு வெயில் பரவாயில்லை இருக்கட்டும் என்று மக்கள் இருந்தார்கள். ஆனால், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வந்தது.
வழக்கமாக ரோடுகளில் நடந்து அல்லது வாகனங்களில் செல்லும்போது வெயில் சுட்டெரிக்கும். ஆனால் ஊரடங்கில் வீடுகளுக்குள் உட்கார முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டியது. ஒரு புறம் கொரானாவுக்கு பயந்து வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம். இன்னொருபுறம் வெப்பத்துக்கு பயந்து வெளியே வரவேண்டிய அவசியம் என்று பொதுமக்கள் அவதிப்பட்டனர். பலரும், பகல் நேரங்களில் வீட்டின் வெளியே உட்கார்ந்து இருந்தனர். இரவில் வெப்பக்காற்று வீசியதால் தூக்கமின்றி மக்கள் தவித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக இருந்தது. நள்ளிரவு வரை சாரலாக தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் நேற்று முன்தினம் இரவு 8.15 மணி அளவில் ஈரோடு மாநகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஒருசில பகுதிகளுக்கும், மற்ற பகுதிகளுக்கு காலை 7 மணி அளவிலும் மின் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று காலையிலும் மழை மேகம் இருண்டு கிடந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காய்ந்து கிடந்த நிலத்தில் நீர் உறிஞ்சப்பட்டாலும் சாலைகளில் ஆறாக வெள்ளம் ஓடியது. பள்ளங்களில் மழை நீர் சாக்கடையை அடித்துச்சென்றது.
பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பள்ளம் ஓடை அணைக்கட்டு பகுதியில் அணைக்கட்டு நிரம்பி வெள்ளம் பாய்ந்தது. இந்த தண்ணீர் சாக்கடையுடன் கலந்து வந்ததால் நுங்கும் நுரையுமாக ஓடியது. ஆகாயத்தாமரை சிறிதளவு அடித்துச்செல்லப்பட்டது. அணைக்கட்டில் இருந்து செல்லும் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் தண்ணீர் நிரம்பி நுங்கும் நுரையுமாக ஓடியது. அனைத்து பகுதிகளிலும் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் நேற்று வெப்பநிலை குறைந்து இருந்தது. குளிர் காற்று வீசியது. இதேபோல் சென்னிமலை, அம்மாபேட்டை பகுதியில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
ஈரோடு -104, சென்னிமலை -47, கொடுமுடி -34, பெருந்துறை -21, கோபி -20, மொடக்குறிச்சி -20, தாளவாடி -14, பவானிசாகர் -8.6, பவானி -5.4, நம்பியூர் -5, கவுந்தப்பாடி -5.