தொற்றுநோய்க்கு மத்தியில் மக்கள் அடிப்படை கடமையை நினைவில் கொள்ள வேண்டும் - ஐகோர்ட்டு கருத்து
தொற்றுநோய்க்கு மத்தியில் மக்கள் அடிப்படை கடமையை நினைவில் கொள்ள வேண்டும் என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
மும்பை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலியினர், சுகாதார பணியாளர்கள் சந்தித்து வரும் சிரமங்கள் தொடர்பான மனு மீது மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது.
மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.வரலே தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், சமூக விலகலை கடைபிடிக்கவும் வேண்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிப்புகள், வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன.
ஆனால் குடிமக்கள் சிலர் இன்னும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சாதாரணமாக இருக்கிறார்கள். மேலும் சிலர் சமூக மற்றும் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு குடிமகனின் அடிப்படை கடமைகளை நமக்கு நாமே நினைவூட்டுவதற்கு இது சரியான தருணம்.
பெரும்பாலும் மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் குறித்து தீவிர அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் அடிப்படை கடமைகளை மறந்து விடுகிறார்கள். இந்த எதிர்பாராத சூழ்நிலையின் பின்னணியில் மக்கள் அடிப்படை கடமைகளை குறிக்கும் இந்திய அரசியலமைப்பின் 51-ஏ பிரிவை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த கடினமான நேரத்தில், இந்திய மக்கள் அனைவரிடமும் பொதுவான சகோதரத்துவ நல்லிணக்கத்தையும், மனப்பான்மையையும் வளர்ப்பது ஒரு குடிமகனின் அடிப்படை கடமை. இந்த நேரத்துக்கான உடனடி தேவையும் கூட.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ள தினக்கூலி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ தயாராக இருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.